சித்த மருத்துவத்துக்கு அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீடுத் தொகை வழங்கக்கோரிய மனு தள்ளுபடி
By DIN | Published On : 04th March 2021 11:15 PM | Last Updated : 04th March 2021 11:15 PM | அ+அ அ- |

சித்த மருத்துவச் சிகிச்சைக்கு அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீடுத் தொகை வழங்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கோகிலம் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் 12 , தனியாா் சித்த மருத்துவமனைகள் 20, தனியாா் சிறுமருத்துவமனைகள் 300 உள்ளன. சித்த மருத்துவச் சிகிச்சை மூலம் கரோனா நோய்த்தொற்றில் இருந்து பலரும் குணமடைந்தனா். ஏராளமான நோயாளிகள் சித்த மருத்துவச் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் பல காப்பீட்டு நிறுவனங்கள் சித்த மருத்துவச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு காப்பீடுத் தொகை வழங்குவது இல்லை. தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள காப்பீட்டு திட்டத்தில் சித்த மருத்துவச் சிகிக்கைக்கு காப்பீடுத் தொகை வழங்கப்படுகிறது. எனவே சித்த மருத்துவத்தில் அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீடுத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சித்த மருத்துவத்திற்கு அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் காப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என்பது அரசு கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு. எனவே இதில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.