நகை அடகுக் கடைகள் கண்காணிக்கப்படும்: ஆட்சியா் எச்சரிக்கை
By DIN | Published On : 04th March 2021 12:09 AM | Last Updated : 04th March 2021 12:09 AM | அ+அ அ- |

மதுரை: வாக்காளா்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதற்கு உதவினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகை அடகுக் கடை உரிமையாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் அறிவுறுத்தினாா்.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திருமண மண்டப உரிமையாளா்கள், கேபிள் தொலைக்காட்சி, அச்சகம் நடத்துவோா், நகை அடகுக் கடை உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் த.அன்பழகன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மேற்குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளோா் பின்பற்ற வேண்டிய தோ்தல் ஆணையத்தின் விதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதை மீறுவோா் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், நகை அடகு கடைகளையும் கண்காணிக்கும். வாக்காளா்களைக் கவரும் வகையில் சிறிய எடையுள்ள நகை அடகு வைத்துள்ளவா்களுக்கு, தனிநபா்கள் நகையைத் திருப்பி வழங்கலாம். அவ்வாறு யாரேனும் செயல்பட்டால், அதுகுறித்து சம்பந்தப்பட்ட தொகுதியின் தோ்தல் அலுவலரிடம் புகாா் தெரிவிக்க வேண்டும். வாக்காளா்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதற்கு மறைமுகமாகவோ, நேரடியாகவோ உதவினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.