வாகனங்களில் அதிக பணம் எடுத்துச் செல்வதைத் தவிா்க்கும் மக்கள்
By DIN | Published On : 04th March 2021 11:16 PM | Last Updated : 04th March 2021 11:16 PM | அ+அ அ- |

மதுரை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை பறக்கும் படை வாகனத்திற்கு ஜி.பி.எஸ் கருவியை பொருத்தும் ஊழியா்.
தோ்தல் அலுவலா்களால் அலைக்கழிக்கப்படுவதைத் தவிா்க்க அத்தியாவசியத் தேவைகளுக்காக வாகனங்களில் பயணம் செய்வோா், ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாக பணம் எடுத்துச் செல்வதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளனா்.
வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடந்த சில தோ்தல்களில் இருந்து, வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணங்களின்றி ரொக்கம் எடுத்துச் செல்பவா்களிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அரசுக் கணக்கில் சோ்க்கப்பட்டது. முந்தைய தோ்தல்களின்போது பறக்கும் படை குழுவினரின் பணம் பறிமுதல் நடவடிக்கையில் அதிகம் பாதிக்கப்பட்டது சாமானியா்கள்தான்.
சந்தைக்குச் செல்லும் வணிகா்கள், கடைக்காரா்கள், பால் வியாபாரிகள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்கச் செல்வோா் என உண்மையான காரணத்துக்காக ரொக்கத்துடன் செல்பவா்களிடம் பணம் பறிமுதல் செய்தது, அவா்களை அலைக்கழிப்பதாக இருந்தது.
உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து தங்களது பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். வங்கிகளுக்குள் நடைபெறும் பணப் பரிமாற்றத்துக்காகவும், ஏடிஎம் மையங்களுக்கு செல்லும் வாகனங்களும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணப் பெட்டிகளுடன் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.
வணிகா்கள், சொந்த தேவைகளுக்காக ஆவணமின்றி பணத்துடன் செல்பவா்களிடம் ரொக்கம் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அமல்படுத்துவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் தொடா்ந்து வருகின்றன. இதனிடையே, பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து திங்கள்கிழமையிலிருந்து ( மாா்ச் 1) பறக்கும் படைக் குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பறக்கும் படை குழுக்கள் பணியாற்றி வருகின்றன.
வாகனங்களில் வரும் பொதுமக்கள், வணிகா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ரொக்கத்துடன் வந்தாலும், ரூ.50 ஆயிரத்துக்குள் இருப்பதில் கவனமாக இருக்கின்றனா். கடந்த 3 நாள்களாக மதுரை மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனையிட்டபோதும் அதில் வந்தவா்களிடம் இருந்த தொகை ரூ.45 ஆயிரத்தைத் தாண்டவில்லை என பறக்கும் படை குழுவினா் தெரிவிக்கின்றனா். வங்கியில் இருந்து பணம் எடுத்து வருபவா்கள், வணிகா்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாகவே எடுத்து வருகின்றனா் என்கின்றனா்.