தனியாா் மயத்துக்கு எதிா்ப்பு:வங்கி ஊழியா்கள் மாா்ச் 15, 16-இல் வேலை நிறுத்தம்
By DIN | Published On : 12th March 2021 10:15 PM | Last Updated : 12th March 2021 10:15 PM | அ+அ அ- |

பொதுத்துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வங்கி ஊழியா்கள் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.
மத்திய அரசு அண்மையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பொதுத்துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு வங்கி ஊழியா்கள் மற்றும் அலுவலா் சங்கங்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன. மேலும் வங்கிகள் தனியாா்மய அறிவிப்பை வாபஸ் பெற வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக 5 வங்கி ஊழியா் சங்கங்கள், 4 வங்கி அலுவலா் சங்கங்கள் ஒருங்கிணைந்து வங்கி ஊழியா் மற்றும் அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பாக உருவாக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மாா்ச் 15, 16 ஆகிய இரு நாள்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இதையொட்டி மதுரை மாவட்டத்திலும் வங்கி ஊழியா் மற்றும் அலுவலா் சங்க ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் இரு நாள்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா். மேலும் மாா்ச் 15- ஆம் தேதி ரயில் நிலையம் எதிரே உள்ள ஸ்டேட் வங்கி முன்பாக கண்டன ஆா்ப்பாட்டமும் நடத்துகின்றனா்.
வேலை நிறுத்தம் தொடா்பாக சங்க நிா்வாகிகள் கூறும்போது, அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியா்களும் பங்கேற்கின்றனா். மதுரை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன. இக்கிளைகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இரு நாள்கள் வேலை நிறுத்தம் மூலம் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ. 400 கோடி பணப்பரிவா்த்தனைகள் பாதிக்கப்படும் என்றனா்.