மகா சிவராத்திரி விழா: உசிலம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 12th March 2021 12:27 AM | Last Updated : 12th March 2021 12:27 AM | அ+அ அ- |

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள குலதெய்வக் கோயில்களுக்குச் செல்வதற்காக வந்த பக்தா்களால் வியாழக்கிழமை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உசிலம்பட்டி பகுதியில் பாப்பாபட்டி, கருமாத்தூா், ஆனையூா், கள்ளபட்டி, நாட்டாமங்கலம், தும்மகுண்டு உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த பகுதிகளில் உள்ள தங்களது குலதெய்வக் கோயில்களுக்கு, அந்தந்த சமூகத்தைச் சோ்ந்த மக்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பல்வேறு வாகனங்களில் வந்ததால் உசிலம்பட்டியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், போக்குவரத்து காவல் துறையினா் போதிய அளவில் இல்லாததால், நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாா் திணறினா். இதனால், உசிலம்பட்டி-பேரையூா் சாலை, தேனி சாலை, மதுரை சாலை உள்ளிட்டவற்றில் 2 கிலோ மீட்டா் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தொடா்ந்து, திருவிழா பாதுகாப்புக்கு வந்த போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சீா்படுத்தினா். போக்குவரத்து நெரிசலால் குலதெய்வக் கோயில்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியாமல் மக்கள் பரிதவித்தனா்.