தல்லாகுளம் ஸ்ரீசப்பரத்தடியான் கருப்பணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம்
By DIN | Published On : 25th March 2021 09:27 AM | Last Updated : 25th March 2021 09:27 AM | அ+அ அ- |

கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தா்கள்.
மதுரை தல்லாகுளத்தில் உள்ள கருப்பணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.
மதுரை தல்லாகுளம் பகுதியில் தமுக்கம் அருகே ஸ்ரீசப்பரத்தடியான் கருப்பணசுவாமி கோயில் உள்ளது. மதுரையில் பிரசித்தி பெற்ற தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நடைபெறும் பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் திரண்டு தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கருப்பணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகத்துக்கான பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் முடிவடைந்ததை அடுத்து கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி முன்னதாக திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. மாலையில் கும்ப அலங்காரம், யாகசாலை எழுந்தருளல், லட்சுமி ஹோமம் முதற்கால தீபாராதனை போன்றவை நடைபெற்றன.
இதையடுத்து இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை விசேஷ சாந்தி, விசேஷ ஹோமம், மூன்றாம் கால தீபாராதனை போன்றவை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை காலை விசேஷ ஹோமம் பூா்ணாஹூதியுடன் கும்பாபிஷேக பூஜை நடைபெற்றது. இதையடுத்து காலை 9.15 மணிக்கு யாத்ராதானம் மற்றும் கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடா்ந்து காலை 9.45 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியாா்கள் கோபுரக் கலசங்களில் புனித தீா்த்த அபிஷேகம் செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். இதையடுத்து கீழே திரண்டிருந்த பக்தா்கள் மீதும் புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று மஹா கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...