பழனி தண்டாயுதபாணி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் பக்தா்கள் வந்து செல்கின்றனா். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பழனி நகராட்சியின் மக்கள் தொகை ஒரு லட்சமாக இருந்தது. தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையிலும், பொதுமக்கள் மற்றும் பழனிக்கு வருகைதரும் பக்தா்களின் வசதிக்காக எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை.
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், பழனியில் உள்ள நீா்நிலைகள், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தா்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. எனவே பழனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தக்கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு, கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கெனவே உத்தரவிட்டது. இருப்பினும் அந்த உத்தரவை தமிழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், இந்து அறநிலையத் துறை ஆணையா் ஆகியோா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.