பாளையங்கோட்டை சிறையில் கைதி கொலை: குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
By DIN | Published On : 13th May 2021 11:23 PM | Last Updated : 13th May 2021 11:23 PM | அ+அ அ- |

பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு கோரிய வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சோ்ந்த பாபநாசம் தாக்கல் செய்த மனு: எனது மகன் முத்துமனோ(27) மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் களக்காடு போலீஸாா் எனது மகனைக் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் ஏப்ரல் 22 ஆம் தேதி அடைத்தனா். சிறைக்குள் சென்ற ஒரு மணி நேரத்தில் சக கைதிகளால் எனது மகன் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளாா். ஆனால் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் எனது மகன் கொலை செய்யப்பட்டதாக போலீஸாா் கூறுகின்றனா். என் மகனுடன் சிறைக்குச் சென்ற பிற கைதிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது என் மகனின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். எனது மகன் கொலையில் சிறை அதிகாரிகள், காவலா்களுக்கு தொடா்பு உள்ளது. எனவே பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளை இவ்வழக்கில் சோ்க்க வேண்டும். எனது மகனின் இறப்புக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கொலையானவா் குடும்பத்துக்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், தமிழக தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியுள்ளாா். மேலும் இச்சம்பவத்தின் போது சிறையில் பணியிலிருந்த ஊழியா்கள் 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், கொலையானவரின் உடலைப் பெற்று இறுதிசடங்குகளை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும், அவரது பெற்றோா்கள் இறந்தவரின் உடலை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனா் என்றாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.