மதுரை மாவட்டம் செல்லம்பட்டி பகுதியில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருவதால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செல்லம்பட்டி அருகே உள்ள கே.வடுகபட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா். அதன் விவரம்:
செல்லம்பட்டி வட்டாரம் கே.வடுகபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 950 ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்து வருகிறது. ஆகவே, தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும். ஏற்கெனவே சுமாா் 5,500 மூட்டைகள் எடை போடுவதற்கு தயாராக இருக்கிறது. மழை காரணமாக அவை சேதமடைந்து வருவதால், நேரடி கொள்முதல் நிலையத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.