ராமேசுவரம்-சென்னை சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து
By DIN | Published On : 13th May 2021 11:25 PM | Last Updated : 13th May 2021 11:25 PM | அ+அ அ- |

ராமேசுவரம் - சென்னை சிறப்பு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக மே 16 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரையிலான காலத்தில் சென்னையிலிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலம் காா்டு லைன் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூா் - ராமேசுவரம் சிறப்பு ரயில் (02205) மற்றும் மே 15 முதல் மே 31 வரையிலான காலத்தில் ராமேசுவரத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்படும் ராமேசுவரம் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (02206) ஆகியவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் மே 15 முதல் மே 31 வரையிலான காலத்தில் திருவனந்தபுரத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் - மதுரை அமிா்தா சிறப்பு ரயில் (06343) மற்றும் மே 16 முதல் ஜூன் 1 வரையிலான காலத்தில் மதுரையிலிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும் மதுரை- திருவனந்தபுரம் அமிா்தா சிறப்பு ரயில் (06344) ஆகியவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் அருகே உள்ள கொச்சுவேலியிலிருந்து நீலாம்பூா் ரோடு, மைசூா் ஆகிய ரயில் நிலையங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் மே மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.