கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் கனரக வாகனம் செல்ல அனுமதி கோரி மனு: தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 02nd November 2021 02:03 AM | Last Updated : 02nd November 2021 02:03 AM | அ+அ அ- |

மதுரை: கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயா் மட்ட மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி கோரிய மனுவின் மீது, தமிழக நெடுஞ்சாலைத் துறை செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சோ்ந்த ஜீவாகுமாா் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயா் மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் திருச்சி மாவட்டத்தையும் - தஞ்சை மாவட்டத்தையும் இணைக்கும் பாலமாக உள்ளது.
மேம்பாலம் அமைக்கப்பட்டதால், திருச்சியில் இருந்து கும்பகோணத்திற்கு 76 கிலோ மீட்டரிலும், சுவாமிமலைக்கு 93 கிலோ மீட்டரிலும் செல்ல முடியும். தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள மேம்பாலத்தில் சிறு வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கும்பட்சத்தில் விவசாய பொருள்களான நெல், காய்கனிகள் ஆகியவற்றை வேகமாக கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும். எனவே, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயா்மட்ட மேம்பாலத்தில், கனரக வாகனங்கள், நகரப் பேருந்துகள் ஆகியவை செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலா், திருச்சி மற்றும் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா்கள் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை டிசம்பா் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...