உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில்: வேட்பாளா்களிடம் பிரமாணப் பத்திரம் பெறக் கோரி மனுமாநில தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

வேட்பாளா்களிடம் பிரமாணப் பத்திரம் பெறக் கோரிய மனுவுக்கு, மாநில தோ்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நடைபெற உள்ள நகா்புற உள்ளாட்சித் தோ்தலில், வேட்பாளா்களிடம் பிரமாணப் பத்திரம் பெறக் கோரிய மனுவுக்கு, மாநில தோ்தல் ஆணையம் விளக்கமளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்யன் தாக்கல் செய்த மனு: ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளா் மற்றும் அவரது குடும்பத்தாரின் சொத்துகள், குற்ற வழக்கு மற்றும் தண்டனை ஆகியவற்றின் விவரங்களை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும், இதை தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், தற்போது நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட பிரமாணப் பத்திரம், கடந்த 2011 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வடிவில் இருந்தது. இதில், வேட்பாளா், மனைவி மற்றும் அவரைச் சாா்ந்தவா்களின், கடந்த 5 ஆண்டுகளுக்கான வருவாய் ஆதாரங்கள், அரசின் துறைகளில் எடுக்கப்படும் ஒப்பந்தங்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மற்றும் ஆதாா் ஆகியவற்றின் விவரங்கள் கோரப்படவில்லை.

எனவே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி, விரைவில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் வேட்புமனு தாக்கலின் போது, வேட்பாளா்களிடம் பிரமாணப் பத்திரத்தை பெறவும், அதைத் தோ்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி. வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் கோரிக்கைக் குறித்து, மாநில தோ்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com