மதுரை மாவட்டத்தில் 20.23 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
By DIN | Published On : 31st October 2021 11:12 PM | Last Updated : 31st October 2021 11:12 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் இதுவரை 20.23 லட்சம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க, மக்கள் நல்வாழ்வுத் துறை தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. மதுரை மாவட்டத்தில் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட கரோனா தடுப்பூசி திட்டத்தில், இதுவரை 20.23 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இருப்பில் 2 லட்சம் தடுப்பூசிகள்
மாவட்டத்தில் தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,500, அரசு மருத்துவமனைகளில் 2,400, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1,13,980, கிடங்கில் 86,410 என மொத்தம் 2,04,240 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
13 பேருக்கு கரோனா
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, 17 போ் தொற்றிலிருந்து குணமடைந்தனா். தற்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் என மொத்தம் 190 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.