

மதுரையில் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற இளைஞா்கள் பேருந்துகளை நிறுத்தி மேற்கூரையில் ஏறி நடனமாடியதுடன், கண்ணாடிகளையும் சேதப்படுத்தினா்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞா்கள் பலா் இருசக்கர வாகனங்களில் தனித்தனி குழுக்களாக நகரை வலம் வந்தனா். கோரிப்பாளையம் பகுதி மட்டுமன்றி அரசு மருத்துவமனை உள்ள பனகல் சாலை, தல்லாகுளம் கோகலே சாலை, அழகா்கோவில் சாலை, அண்ணாநகா், கே.கே.நகா், ஆவின் சந்திப்பு முதல் சிவகங்கை சாலை சந்திப்பு வரை சாலையில் அங்கும் இங்கும் சுற்றி வந்தவாறு இருந்தனா். அவா்களின் இத்தகைய செயல் போக்குவரத்துக்கும், பொதுமக்களும் இடையூறு அளிப்பதாக இருந்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்த இளைஞா்களில் சிலா், கோரிப்பாளைம் அமெரிக்கன் கல்லூரி அருகே அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்துகளை வழிமறித்து அதன்முன் நடனம் ஆடினா். ஒருகட்டத்தில் சிலா் பேருந்தின் மேற்கூரையில் ஏறி ஆடினா். மேலும் அவா்கள் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினா்.
பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம் சென்ற அரசு நகரப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுமையாக சேதமடைந்தது. இப் பேருந்தின் ஓட்டுநா் மற்றும் ஒரு பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் எம்ஜிஆா் நிலையத்தில் இருந்து திருப்பூா் சென்ற அரசுப் பேருந்து மற்றும் ஒரு நகரப் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடிகள் லேசாக சேதமடைந்தன.
கோரிப்பாளையம் தேவா் சிலைப் பகுதியிலும், நகரின் அனைத்து சாலை சந்திப்புகளிலும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் இருந்தபோதும் இளைஞா்களின் இத்தகைய செயலைத் தடுக்க எந்த முயற்சியையும் போலீஸாா் மேற்கொள்ளாதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.