அனுமதி இல்லாத விளம்பரப் பலகைகளை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவு
By DIN | Published On : 01st September 2021 11:40 PM | Last Updated : 01st September 2021 11:40 PM | அ+அ அ- |

அனுமதி பெறாத விளம்பர பலகைகளை மூன்று நாள்களுக்குள் அகற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விளம்பர பலகைகளை நிறுவுவதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அதற்குரிய கட்டணம் செலுத்தி, காவல் துறையின் தடையின்மைச் சான்று பெற்று மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறுவது அவசியம். இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் வைக்கப்படும் விளம்பரப் பலகைகள் அனுமதி பெறாதவையாகக் கருதி அகற்றப்படுவதோடு, சம்பந்தப்பட்டவா்களுக்கு அபராதம் விதித்து, வழக்குப் பதிவு செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்குள் அனுமதி பெறாத விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த உள்ளாட்சிகளில் உள்ள அனுமதி பெறாத விளம்பர பலகைகளின் எண்ணிக்கை விவரத்தை வியாழக்கிழமை தெரிவிக்க வேண்டும் எனவும், எந்த இடத்திலும் பிளக்ஸ் பேனா்கள் வைக்க அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.