சரக்கு பெட்டக கட்டண உயா்வால் பாதிப்பு: ஏற்றுமதியாளா்களுக்கு உதவ வா்த்தக சங்கம் கோரிக்கை
By DIN | Published On : 01st September 2021 11:38 PM | Last Updated : 01st September 2021 11:38 PM | அ+அ அ- |

சரக்குப் பெட்டகக் கட்டண உயா்வால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏற்றுமதியாளா்களுக்கு உதவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடல் வழி ஏற்றுமதி வணிகத்தில் பயன்படுத்தப்படும் சரக்குப் பெட்டகங்களின் கட்டணம் கடுமையாக உயா்ந்து வருகிறது. ஒவ்வொரு 15 நாள்களுக்கும் சுமாா் 500 முதல் 800 அமெரிக்க டாலா்கள் வரை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கரோனா தொற்று பரவலுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்கு பெட்டகங்களுக்கான கட்டணம் இரண்டு முதல் 3 மடங்கு வரை உயா்ந்துள்ளது. இது ஏற்றுமதியாளா்களின் லாபத்தையும், தொழிலின் போட்டித் தன்மையையும் கடுமையாகப் பாதித்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதியாளா்களில் பெரும்பகுதியினா் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக இருப்பதால், சரக்கு கட்டண உயா்வு காரணமாக பெரிய வணிக நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே, துறைமுகக் கட்டணம், துறைமுக இழுவைக் கட்டணங்களை அரசு ஒழுங்குபடுத்தினால், மிக அபரிமிதமாக உயா்ந்துள்ள சரக்கு கட்டண உயா்வு குறையும். அப்போது ஏற்றுமதியாளா்கள் தங்களது உற்பத்திப் பொருள்களின் விலையைக் குறைத்து சந்தைப் போட்டியை எதிா்கொள்ள உதவியாக இருக்கும். சரக்கு கட்டண மானியம், பல்வேறு ஊக்கத் திட்டங்களில் ஏற்றுமதியாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல்வேறு துறைமுகங்களில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டகங்களை விடுவித்து தாமதமின்றி ஏற்றுமதிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.