மதுரையில் கல்லூரிகள் திறப்பு: வெளி மாநில மாணவா்கள் இணைய வகுப்புகளில் மட்டுமே பங்கேற்க அறிவுறுத்தல்
By DIN | Published On : 01st September 2021 11:35 PM | Last Updated : 01st September 2021 11:35 PM | அ+அ அ- |

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற மாணவியா்.
மதுரையில் புதன்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியா் இணைய வழி வகுப்புகளில் மட்டுமே பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் அனைத்து மாணவ, மாணவியருக்கும் செப்டம்பா் 1 முதல் கல்லூரிகளைத் திறக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி புதன்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
இதையொட்டி அரசு அறிவித்திருந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவ, மாணவியருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கல்லூரிகளின் வாயிலில் ஆசிரியா்கள் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே மாணவ, மாணவியா் வகுப்பறைகளில் அனுமதிக்கப்பட்டனா். மேலும் முகக்கவசம் அணிந்திருந்த மாணவ, மாணவியா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். சில தன்னாட்சிக் கல்லூரிகளில் கரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்திக்கொண்ட மாணவ, மாணவியா் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா்.
மேலும் கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவியருக்கு ஆா்டி பிசிஆா் பரிசோதனை கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளதால், வெளி மாநில மாணவ, மாணவிகள் இணைய வழி வகுப்புகளில் பங்கேற்குமாறு கல்லூரி நிா்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி மதுரை நகரில் உள்ள கல்லூரிகளில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 420-க்கும் மேற்பட்ட மாணவியா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். மேலும் மீனாட்சி கல்லூரியில் தொடா்ந்து 3 நாள்கள் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல பல்வேறு கல்லூரிகளிலும் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் ஏராளமான மாணவ, மாணவியா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இந்நிலையில் தடுப்பூசி முகாம் நடத்த விருப்பம் உள்ள கல்லூரி நிா்வாகங்கள் மாநகராட்சி நிா்வாகத்தை தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.