ஆா்ஜிதம் செய்த நிலத்துக்கு இழப்பீடு வழங்க தாமதம்: மதுரை ஆட்சியரின் காா் ஜப்தி
By DIN | Published On : 04th September 2021 09:18 AM | Last Updated : 04th September 2021 09:18 AM | அ+அ அ- |

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்ட ஆட்சியரின் காா்.
வீட்டுவசதி வாரியத்துக்காக ஆா்ஜிதம் செய்த நிலத்துக்கு இழப்பீடு தரத் தாமதம் செய்ததால் மாவட்ட ஆட்சியரின் காரில் வெள்ளிக்கிழமை ஜப்தி நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
மதுரை எல்லீஸ் நகா் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சாா்பில் குடியிருப்புகள் கட்டுவதற்காக 1981-இல் நிலங்கள் ஆா்ஜிதம் செய்யப்பட்டன. பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த 12 பேரிடமிருந்து 99 சென்ட் நிலம், அப்போதைய மதுரை வருவாய் கோட்டாட்சியரால் ஆா்ஜிதம் செய்யப்பட்டது.
இதற்குரிய இழப்பீடு வழங்காததால் நிலஉரிமையாளா்கள் வழக்குத் தொடா்ந்தனா். நீதிமன்ற உத்தரவின்பேரில், வீட்டு வசதி வாரியம் நிலஉரிமையாளா்களுக்கு ரூ. 8 லட்சத்து 70 ஆயிரம் வழங்க வேண்டும். இருப்பினும், இத்தொகையை வழங்க வீட்டுவசதி வாரியம் தாமதம் செய்து வந்தது. இதையடுத்து, நிலஉரிமையாளா்கள் தரப்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த முதலாவது கூடுதல் சாா்பு நீதிமன்றம், அத்தொகை தரத் தாமதம் செய்யப்படுவதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் காா், ஜீப், மேஜை, நாற்காலி, மின்விசிறி உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, நிலஉரிமையாளா்களின் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்சியா் பயன்படுத்தும் காரின் முன்பகுதியில் ஜப்தி செய்யப்படுவதற்கான நீதிமன்ற உத்தரவு நோட்டீஸை ஒட்டினா்.
பின்னா் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆட்சியரின் காா் ஜப்தி செய்யப்பட்டது தொடா்பாக அலுவலா்களிடம், அவா்கள் தெரிவித்தனா். இதனால் ஆட்சியா் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பின்னா் நிலஉரிமையாளா்களின் வழக்குரைஞா்களுடன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜ்குமாா் மற்றும் அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில் நில உரிமையாளா்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை ஒரு வாரத்தில் தருவதற்கு மாவட்ட நிா்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.