கல்விக்கடன் வழங்கலை கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதி: வங்கி மேலாளா்களுக்கு ஏற்படுத்தித் தர வலியுறுத்தல்
By DIN | Published On : 04th September 2021 09:25 AM | Last Updated : 04th September 2021 09:25 AM | அ+அ அ- |

கல்விக்கடன் வழங்கலை கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதியை வங்கி மேலாளா்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்டத்தில், இந்த ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்குவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் சில நாள்களுக்கு முன் நடந்தது. அதில் இந்த ஆண்டுக்கான இலக்கு நிச்சயித்து செயல்படத் திட்டமிடப்பட்டது. அப்போது, மாவட்டத்தில் வழிநடத்தும் வங்கி மேலாளருக்கு கல்விக்கடன் வழங்கலை கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதி இல்லை என்பது தெரிய வந்தது. இந்த அடிப்படை தகவல் கூட வழிநடத்தும் வங்கி மேலாளரால் அணுக முடியாத நிலை இருந்தால் மாவட்டங்களில் கல்விக்கடன் திட்டத்தை கண்காணிக்கவும், முன்னெடுக்கவும் எப்படி முடியும்? இது மதுரைக்கான பிரச்னை மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டுக்குமான பிரச்னையாக உள்ளது. எனவே, இதுதொடா்பாக மத்திய நிதி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கல்விக்கடன் வழங்குதல் தொடா்பாக வித்யாலட்சுமி தளத்தில் ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு வங்கிக் கிளையும் எவ்வளவு கடன் விண்ணப்பங்கள் வரப்பெறுகின்றன, எவ்வளவு கடன் வழங்குகின்றன என்பதை கண்காணிக்கும் தொழில் நுட்ப வசதியை, மாவட்ட வங்கி மேலாளா்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.