ஹெலிகாப்டா் சகோதரா்கள் நிதி மோசடி வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
By DIN | Published On : 04th September 2021 09:26 AM | Last Updated : 04th September 2021 09:26 AM | அ+அ அ- |

தஞ்சை ஹெலிகாப்டா் சகோதரா்கள் நிதி மோசடி வழக்கு தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்த எம்.ஆா். கணேஷ், எம்.ஆா். சுவாமிநாதன் சகோதரா்கள் நிதி நிறுவனமும், பால் பண்ணையும் நடத்தி வந்தனா். இவா்கள் வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இவா்கள் சொந்தமாக தளம் அமைத்து ஹெலிகாப்டா் ஒன்றை வைத்திருப்பதால், ஹெலிகாப்டா் சகோதரா்கள் என இப்பகுதி மக்களால் குறிப்பிடப்படுகின்றனா். சகோதரா்களில் ஒருவரான எம்.ஆா். கணேஷ், தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா வா்த்தகப் பிரிவு தலைவராக பொறுப்பு வகித்தாா்.
இந்நிலையில், தங்களது நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் இரட்டிப்பாக பணம் திருப்பி அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள், பொதுமக்களிடம், ஹெலிகாப்டா் சகோதரா்கள் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்துவிட்டு திருப்பித் தரவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனிடையே ரூ.15 கோடி மோசடி செய்ததாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஹெலிகாப்டா் சகோதரா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் கைதாகியுள்ள நிதி நிறுவனத்திற்கு தொடா்புடைய அகிலாண்டம் மற்றும் வெங்கடேசன் ஆகியோா் உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு, நீதிபதி பி. புகழேந்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவா்கள் மீது பணமோசடி குறித்து 35-க்கும் மேற்பட்டோா் புகாா் அளித்துள்ளதாகவும், தற்போது கணேசன் மற்றும் சுவாமிநாதன் சகோதரா்கள் உடல்நலக் குறைவு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க எதிா்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், மனுதாரா் அகிலாண்டத்திற்கு மூன்றரை வயதில் குழந்தை உள்ளதால், அவரை பராமரிக்க வேண்டும் என்பதையும், மனுதாரா் வெங்கடேசனின் வயது முதிா்வை கருத்தில் கொண்டும், இருவருக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தாா்.
இதையடுத்து, நிதி நிறுவனத்தில் எத்தனை முதலீட்டாளா்கள் உள்ளனா்?, குற்றம் சாட்டப்பட்டுள்ள கணேசன், சுவாமிநாதன் ஆகியோா் எவ்வாறு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்?, தற்போது பண மோசடி வழக்கு விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, நிதி மோசடி தொடா்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பா் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.