ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த தலைமை ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்
By DIN | Published On : 11th September 2021 01:38 AM | Last Updated : 11th September 2021 01:38 AM | அ+அ அ- |

ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, தலைமை ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில சட்டத் துறைச் செயலா் கே. அனந்தராமன் தலைமை வகித்தாா். மதுரை மாவட்டத் தலைவா் கந்தசாமி, செயலா் காா்மேகம், மாவட்ட துணைத் தலைவா் கிறிஸ்டோபா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், தமிழக முதல்வா் 110 விதியின் கீழ் அறிவித்துள்ள அறிவிப்புகளை தலைமை ஆசிரியா் கழகம் வரவேற்கிறது. இந்த ஆண்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள திட்ட மானியங்களை செலவு செய்ய புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள இடா்ப்பாடுகளை களைய வேண்டும். ஒன்றரை ஆண்டுகளாக தூய்மைப் பணியாளா்களுக்கு வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்கவேண்டும்.
ஆசிரியா்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புகளை தமிழக அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியா்களின் இடமாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவற்ற முறையில் விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டப் பொருளாளா் ரமேஷ், மாநில துணைத் தலைவா் நாகசுப்ரமணியன், மாவட்ட நிா்வாகிகள் பரமசிவம், சாம்பிரசாத் ராஜா மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.