மதுரையில் கள்ளழகர் தசாவதார வைபவம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

சித்திரை திருவிழாவின் சிறப்பு பெற்ற நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி ராமராயர் மண்டகப்படியில் நேற்று இரவு விடிய விடிய நடைபெற்றது.
மதுரையில் கள்ளழகர் தசாவதார வைபவம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

சித்திரை திருவிழாவின் சிறப்பு பெற்ற நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் தசாவதார நிகழ்ச்சி ராமராயர் மண்டகப்படியில் நேற்று இரவு விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'கோவிந்த' கோஷம் முழங்கிட சாமி தரிசனம் செய்தனர். 

சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கடந்த 16ஆம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் அன்று இரவு வண்டியூர் வீரராக பெருமாள் கோயிலில் எழுந்தருளினார். பின்னர் அன்று இரவு நடைபெற்ற திருமஞ்சனத்தை தொடர்ந்து வீரராகவ பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகர் வண்டியூர் வைகை ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவத்தை தொடர்ந்து கருட வாகனத்தில் புறப்பட்டு இரவு ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளினார். அங்கு இரவு முழுவதும் தசாவதார நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. முத்தங்கி சேவையில் துவங்கி ,தொடர்ந்து கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளித்தார்.

இதே போன்று, வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தசாவதார வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று 'கோவிந்தா' எனும்  கோஷம் முழங்கிட சாமி தரிசனம் செய்தனர். 

தொடர்ந்து இன்று காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய கள்ளழகர் பிற்பகலில் திருமஞ்சணமான பின்பு அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இதனை அடுத்து நாளை அதிகாலை சுமார்  2.30 மணியளவில் அங்கிருந்து பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் அழகர் கோயில் நோக்கி புறப்படுகிறார்.

அப்போது பல்வேறு மண்டகப்படிகளுக்கு எழுந்தருளும் கள்ளழகர் 20ஆம் தேதி காலை தனது இருப்பிடமான அழகர்மலை செல்கிறார். 21ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com