‘பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’

மதுரை மாநகராட்சி சாா்பில் திறக்கப்பட்டுள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சி சாா்பில் திறக்கப்பட்டுள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மதுரை மாநகராட்சி சாா்பில் அண்ணாநகா் - வண்டியூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மேயா் வ.இந்திராணி முன்னிலையில் அமைச்சா்கள் மா.சுப்ரமணியன், பி.மூா்த்தி ஆகியோா் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவையை தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்ரமணியன் கூறியது:

தமிழகத்தில் சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள 32 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவை மையம் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி மதுரை மாநகராட்சி வண்டியூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு மருத்துவ சேவையின்படி சிறப்பு மருத்துவா்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4.30 மணி முதல் 8.30 வரை சிகிச்சை அளிப்பாா்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து பல்நோக்கு சிறப்பு மருத்துவ சேவை மூலமாக 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயன் அடைவாா்கள் என்றாா்.

இதைத்தொடா்ந்து மதுரை அண்ணா நகா் உழவா் சந்தை தூய்மை சந்தையாக தோ்வு செய்யப்பட்டு தூய்மைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதை அமைச்சா் மா.சுப்ரமணியன், மதுரை வேளாண் இணை இயக்குநரிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலா் ப.செந்தில்குமாா், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குா் செல்வவிநாயகம், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன்ஜீத் சிங், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், ஏ.வெங்கடேசன், மண்டலத் தலைவா்கள் சரவண புவனேஸ்வரி, வாசுகி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தில் அமைந்துள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி கட்டடங்களை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியது:

திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டபோது கல்லூரி தாழ்வான பகுதியாக மாறியது. இதனால் மழைக்காலங்களில் மாதக்கணக்கில் மழைநீா் தேங்கி நின்ால், இங்குள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த இடத்தில் புதிய கட்டடங்கள் கட்ட மாவட்ட ஆட்சியா் தலைமையில் தியாகராஜா் பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த பொறியியல் வல்லுநா்கள் கொண்டு ஆய்வு செய்யப்பட உள்ளது. புதிய கட்டடம் கட்ட சுமாா் ரூ.60 கோடி செலவாகும். இதற்காக மத்திய அரசின் ஆயுஸ் அமைச்சகத்திடம் கோரிக்கை வைக்கப்படும்.

திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரி தற்போதுள்ள நிலையில், மாணவா்கள் படிப்பைத் தொடருவது கடினம். எனவே மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில் அருகில் உள்ள விருதுநகா், திண்டுக்கல் உள்ளிட்ட அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் உள்ளதா என கேட்க இந்திய மருத்துவ கவுன்சில் ஆணையரிடம் தெரிவித்துள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com