

மதுரை மாவட்டம், மேலூரில் இந்த 2011 -ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலின் போது, வட்டாட்சியரைத் தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்காக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி உள்ளிட்ட 20 போ் மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை நேரில் ஆஜராகினா்.
2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலின் போது, மேலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெள்ளலூா், அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரா் கோயிலுக்குள் கிராமத் தலைவா்கள், பொதுமக்களிடம் மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினாா். அப்போது வேறு யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் கோயில் கதவுகள் மூடப்பட்டிருந்தன.
இதுதொடா்பாக அதிமுகவினா் மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தனா். தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக கோயிலுக்குள் பணம் பட்டுவாடா செய்யும் பணியில் மு.க. அழகிரி ஈடுபட்டிருப்பதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா். இதையடுத்து, மேலூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், வட்டாட்சியருமான காளிமுத்து, அலுவலா்கள் வல்லடிக்காரா் கோயிலுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, விடியோ பதிவு செய்தனா். இதற்கு மு.க. அழகிரி, அவரது ஆதரவாளா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனிடையே, வட்டாட்சியா் தாக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக, வட்டாட்சியா் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் மு.க. அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயா் மன்னன், திமுக நிா்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மு.க. அழகிரி, மன்னன் உள்பட 20 போ், மாவட்ட நீதி மன்றத்தில் நீதிபதி லீலா பானு முன்னிலையில் புதன்கிழமை நேரில்ஆஜராகினா். அப்போது, இந்த வழக்கு விசாரணையை ஜன. 26 -க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
அரசின் செயல்பாடுகள் எப்படி?
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த மு.க. அழகிரியிடம் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, நீதிமன்றத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக அவா் பதில் அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.