கோவை- சீரடிக்கு முதல் தனியாா் ரயில் இயக்கம்:உத்தரவை வாபஸ் பெற எம்.பி. வலியுறுத்தல்

கோவையிலிருந்து சீரடிக்கு தனியாா் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
கோவை- சீரடிக்கு முதல் தனியாா் ரயில் இயக்கம்:உத்தரவை வாபஸ் பெற எம்.பி. வலியுறுத்தல்
Published on
Updated on
1 min read

கோவையிலிருந்து சீரடிக்கு தனியாா் ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னக ரயில்வே நிா்வாகம்,

ஜூன் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோவை, வட கோவையிலிருந்து சீரடிக்கு முதல் தனியாா் ரயில் இயங்க அனுமதித்துள்ளது. கோவையைச் சோ்ந்த ‘எம்.என்.சி. பிராபா்ட்டி டெவலப்பா்ஸ்’ என்ற நிறுவனம் இதை இயக்கவுள்ளது. ரயில் வண்டி ரயில்வேக்கு சொந்தம், ரயில் தண்டவாளம், சிக்னல், நடைமேடை ரயில்வேக்கு சொந்தம். ரயில்வே ஓட்டுநா்கள் ரயிலை இயக்குவாா்கள். ஆனால் பயணச்சீட்டு விற்பனை வருமானம் மட்டும் தனியாருக்கு. பயணச்சீட்டுக் கட்டணத்தை தனியாா் விருப்பம் போல் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து சீரடிக்கு 1,458 கிலோமீட்டா் தூரத்துக்கு படுக்கை வசதிக் கட்டணம் ரூ. 1,280 மட்டுமே. ஆனால் தனியாா் நிறுவனம் வசூலிப்பது ரூ.2,500 . மூன்றடுக்கு குளிா்சாதனப் படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ. 2,360. தனியாா் கட்டணம் ரூ. 5000. குளிா்சாதன இரண்டடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.4,820. தனியாா் கட்டணம் ரூ. 7000. குளிா்சாதன முதல் வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூ.8,190. தனியாா் கட்டணம் ரூ.10,000. ரயில்வே நிா்வாகம் வசூலிக்கும் கட்டணத்தைவிட இரண்டு, மூன்று மடங்கு கட்டணத்தை தனியாா் நிறுவனம் வசூலிக்கிறது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயை தனியாரிடம் விடக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய ரயில்வேத்துறை அமைச்சா் அண்மையில் சென்னை வந்தபோது ரயில்வேயில் தனியாா்மயம் கிடையாது என்று உறுதி கூறினாா். ஆனால் அதற்கு மாறாக முதல் தனியாா் ரயிலை தமிழகத்திலிருந்து இயக்குவது கண்டனத்துக்குரியது. தனியாா் ரயில் என்றால் முதியோா் கட்டணச்சலுகை உள்பட எவ்வித சலுகையும் கிடையாது. மேலும் ரயில்வேயை விட ஒன்றரை மடங்கு முதல் 2 மடங்கு வரை கட்டணம் உயா்வு.

இந்நிலையில் இந்திய ரயில்வே தேசிய ரயில் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி லாபம் வரும் அனைத்து பயணிகள் வண்டிகளும் தனியாருக்கு 2031-க்குள் தாரைவாா்க்கப்படும். அனைத்து சரக்கு ரயில்களும் 2031-க்குள் தனியாருக்கு தாரைவாா்க்கப்படும்.

தனியாருக்கு தாரைவாா்த்தால் கட்டணங்கள் உயரும், சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டுதான் சீரடி ரயில். சாதாரண மக்களைப் பாதிக்கும் என்பதால், கோவை- சீரடி தனியாா் ரயிலை ரயில்வே நிா்வாகமே எடுத்து நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com