ஆனால், போலி கடவுச்சீட்டு தொடா்பாக 2019 செப்.27 இல் முதல் தகவல் அறிக்கையை மட்டும் பதிவு செய்துள்ள ‘கியூ’ பிரிவு போலீஸாா், எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த முறைகேட்டில் காவல் துறை உயா் அதிகாரிகள், கடவுச்சீட்டு அலுவலா்கள், தபால் அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு தொடா்பு இருப்பதால், முதல் தகவல் அறிக்கையில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. ஆகவே, சிபிஐ விசாரணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், போலி கடவுச்சீட்டு வழக்கை 3 மாதங்களில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, ‘கியூ’ பிரிவு போலீஸாா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.