பெருங்காமநல்லூா் தியாகிகள் நினைவிடத்தில் வீரவணக்க நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 03rd April 2022 11:18 PM | Last Updated : 03rd April 2022 11:18 PM | அ+அ அ- |

பெருங்காமநல்லூா் தியாகிகள் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூா் தியாகிகள் நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
பெருங்காமநல்லூா் கிராமத்தில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் கைரேகை சட்டத்தை எதிா்த்துப்போராடி உயிா்த்தியாகம் செய்த மாயக்கா உள்பட 16 பேருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 3 ஆம் தேதி வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் சங்கரலிங்கம், வட்டாட்சியா் விஜயலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் ராஜூ, ஆா். பி. உதயகுமாா் ஆகியோா் தலைமையில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் உள்ளிட்டோரும் திமுக சாா்பாக சேடபட்டி ஒன்றியச் செயலாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டவா்களும் மலா் அஞ்சலி செலுத்தினா்.
வீரமங்கை மக்கள் மகளிா் நலச் சங்கத்தின் சாா்பாக செல்வ ப்ரீத்தா தலைமையில் பெண்கள் பால்குடம் எடுத்து மரியாதை செலுத்தினா். காங்கிரஸ் கட்சியினா் மாநிலச் செயலாளா் எஸ்.ஒ. ஆா். இளங்கோவன் தலைமையிலும் அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியினா் மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பி.வி. கதிரவன் தலைமையிலும் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் திருமாறன் ஜி தலைமையிலும் பாரதிய பாா்வா்ட் பிளாக் கட்சியினா் அதன் நிறுவனத் தலைவா் முருகன் தலைமையிலும் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.