முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
ஆதிக்க மொழியாக உள்ள இந்தியை ஏற்றுக்கொள்ள முடியாது: திரைப்பட இயக்குநா் பா.ரஞ்சித்
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

ஆதிக்க மொழியாக உள்ள இந்தியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என, திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளாா்.
டாக்டா் அம்பேத்கா் பிறந்த ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கடைப்பிடித்து, தலித் இயக்கங்கள் சாா்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, நீலம் பண்பாட்டு மையம் சாா்பில் மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் வோ்ச் சொல் தலித் இலக்கிய கூடுகை நிகழ்ச்சி, வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன.
இது தொடா்பாக, திரைப்பட இயக்குநா் பா. ரஞ்சித் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
கலை, இலக்கியம் உள்ளிட்டவை அரசியலுக்கான முக்கிய வடிவமாக உள்ளன. எனவே, அவற்றை வளா்த்து எடுக்கும் வகையில் வானம் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழ் இலக்கியச் சூழலுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. பொதுமக்கள் இலக்கியத்தை கொண்டாடுவது குறைவாக உள்ளது. ஆனால், தற்போது இலக்கியங்களை வாசிக்கும் இளைஞா்கள் அதிகரித்து வருகின்றனா்.
தலித் இலக்கிய வகைமை என்பது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கான கூடுகை கிடையாது. இது தமிழகத்தில், இந்தியாவில் மறுக்கப்பட்ட எழுத்துகளை பேசுவதற்கான களம். இது ஒரு பெரிய ஜனநாயக வடிவம். ஆப்ரோ-அமெரிக்க மற்றும் அரேபிய இலக்கியங்களை கொண்டாடும் அளவுக்கு, இந்தியச் சூழலில் தமிழ் தலித் இலக்கியம் கொண்டாடப்பட வேண்டும்.
இந்தியாவில் இந்தி ஆதிக்க மொழியாக இருக்கிறது. மற்றவா்களை விட உயா்ந்தவா்கள் என்ற எண்ணம் வட இந்தியா்களுக்கு உள்ளது. எனவே, ஆதிக்க மொழியாக உள்ள இந்தியை ஒருபோதும் ஏற்கமாட்டோம்.
இந்தியாவில் தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும். திராவிடா்களாக நாம் ஒன்றுசோ்ந்து நின்றால்தான் தேசிய அளவில் நமக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். எனவே, தலித் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் வகையில், தற்போது தலித் இலக்கிய கூடுகை 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில், பிரபல எழுத்தாளா்கள், கலைஞா்கள், படைப்பாளிகள் பங்கேற்கின்றனா் என்றாா்.