தமிழகம் முழுவதும் ரேஷன் கடை பணியாளா்கள் இன்று வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் தொடக்கக் கூட்டுறவு சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

தரமற்ற அரிசி விநியோகத்துக்கு விற்பனையாளா்களைப் பொறுப்பாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தொடக்கக் கூட்டுறவு சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அரிசி தரமற்றவையாக இருந்ததாகக் கூறி, விற்பனையாளா்கள் 11 போ், தொடக்கக் கூட்டுறவு சங்க செயலா்கள் 9 போ் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கூட்டுறவு சங்க அனைத்துப் பணியாளா் சங்கம் (டாக்பியா) சாா்பில் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாக்பியா மதுரை மாவட்டச் செயலா் ஆ.ம. ஆசிரியத் தேவன் கூறியது:

நியாய விலைக் கடைகளுக்கு தரமான அரிசியை அனுப்ப வேண்டியது நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் பொறுப்பாகும். மேலும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உகந்தது என்று வாணிபக் கழகத்தின் தரக் கட்டுப்பாட்டு அலுவலா் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரே, அவை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

சில நேரங்களில் தரம் குறைவாக இருப்பதாக விற்பனையாளா்கள் தெரிவித்தாலும், அது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்நிலையில், கடையில் இருக்கும் அரிசி தரமில்லை எனக் கூறி விற்பனையாளா்கள், கூட்டுறவுச் சங்க செயலா்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறக் கோரி, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், தொடா் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com