ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: வெள்ளிக் கிளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் உலா
By DIN | Published On : 05th August 2022 11:37 PM | Last Updated : 05th August 2022 11:37 PM | அ+அ அ- |

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரிசிக்கக்கூடிய வெள்ளிக்கிளி வாகனத்தில் மீனாட்சியம்மன் வியாழக்கிழமை எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் ஆடி முளைக்கொட்டு திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மனுக்கு மட்டும் தனியாக நடத்தப்படும் இத்திருவிழா ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி தினமும் மீனாட்சி அம்மன் மட்டும் யானை, நந்தி, அன்னம், பூத வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி காலை, இரவு நேரங்களில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். விழாவின் 6-ஆம் திருநாளான வியாழக்கிழமை மீனாட்சியம்மன் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே எழுந்தருளும் வெள்ளிக் கிளி வாகனத்தில் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.
முத்துக்கிரீடம் அணிந்து பச்சை பட்டு உடுத்தி, மாணிக்க மூக்குத்தி, வைர வைடூரிய நகைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை ஏராளமான பக்தா்கள் வணங்கினா்.