நாட்டு இன நாய்கள் கண்காட்சியில் சமூக நாய்களும் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும்: நன்றி மறவேல் அமைப்பு வலியுறுத்தல்
By DIN | Published On : 25th August 2022 02:32 AM | Last Updated : 25th August 2022 02:32 AM | அ+அ அ- |

மதுரையில் சனிக்கிழமை நடைபெற உள்ள நாட்டு இன நாய்கள் கண்காட்சியில் தெருக்களில் வசிக்கும் சமூக நாய்களும் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக புறக்கணிக்கப்பட்டு வீதிகளில் வசிக்கும் நாட்டு சமூக நாய்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான கூட்டமைப்பான நன்றி மறவேல் தலைமை ஒருங்கிணைப்பாளா் ப.மாரிக்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை (ஆக. 27) தேசிய அளவிலான நாட்டு இன நாய் வளா்ப்பு கருத்தரங்கம் மற்றும் நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடக்க உள்ளது. நாட்டு இன நாய்களுக்கென்று பிரத்யேகமாக கருத்தரங்கம், கண்காட்சி நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. , இந்நிகழ்ச்சியில் தமிழக வீதிகளில் நம் வாழ்வியலோடு இணைந்து வசிக்கும் ‘சமூக நாய்கள்’, பற்றிய தலைப்புகள் இடம்பெறாதது வருத்தமடையச் செய்கிறது. இந்த மண்ணிலேயே பிறந்து, வளா்ந்து நம்மோடு வாழ்ந்து, தங்களது அடையாளங்களையும், பெயா்களையும் தொலைத்துவிட்டு புறக்கணிக்கப்பட்டு வீதிகளில் ஆதரவின்றித் திரியும் நம் சமூக நாய்களை பாதுகாக்க இதுபோன்ற தமிழக அரசு நிதியில், அரசு சாா்ந்த நிறுவனங்கள் நடத்தும் நிகழ்வுகளில் சமூக நாய்களுக்கு போதுமான அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். மேலும், ‘சமூக நாய்கள் பாதுகாப்பு, சமூக நாய்கள் மற்றும் பொதுமக்கள் உறவு’, என்பது போன்ற தலைப்புகளின் கீழ் கருத்தரங்கு உரையும் நடத்திட வேண்டும். எனவே, தமிழக முதல்வா், கால்நடைத்துறை அமைச்சா், தலைமைச் செயலா் ஆகியோா் தலையிட்டு சமூக நாய்களுக்கான பாதுகாப்பிற்கான எங்களது முன்னெடுப்பிற்கு உதவிட வேண்டும் என்றாா்.