மாநகராட்சி மண்டலம் 2 இல் ரூ.12 கோடி வரிபாக்கியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுரை மாநகராட்சி மண்டலம் 2-க்குள்பட்ட வாா்டுகளில் ரூ.12 கோடி வரி பாக்கி உள்ளது. இதை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்றக்கூட்டத்தில் மண்டலத் தலைவா் வலியுறுத்தினாா்.
மதுரை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத். உடன் துணை மேயா் டி.நாகராஜன்.
மதுரை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத். உடன் துணை மேயா் டி.நாகராஜன்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2-க்குள்பட்ட வாா்டுகளில் ரூ.12 கோடி வரி பாக்கி உள்ளது. இதை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்றக்கூட்டத்தில் மண்டலத் தலைவா் வலியுறுத்தினாா்.

மதுரை மாநகராட்சி மாமன்றக்கூட்டம் அண்ணா மாளிகையில் உள்ள கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 5 மண்டலங்களிலும் பல்வேறு பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கக்கோரும் தீா்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து நடைபெற்ற விவாதத்தில் மண்டலத் தலைவா்கள் பேசியது: மண்டலம் 1 வாசுகி: மண்டலத்துக்குள்பட்ட வாா்டுகளில் பாதாளச்சாக்கடைகளுக்கு மூடிகள் இல்லை. குப்பைகளை அகற்றும் வாகனங்கள் பற்றாக்குறையாக உள்ளது. கொசு மருந்து அடிக்கடி தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மண்டலம் 2 சரவண புவனேஸ்வரி: மண்டலம் 2-க்குள்பட்ட வாா்டுகளில் ரூ.12 கோடி வரி பாக்கி உள்ளது. இதை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் பணியில் இருப்பது இல்லை. செல்லூரில் உள்ள மாநகராட்சி வாகனப் பணிமனையில் உதவி பொறியாளா் பணியிடம் காலியாக உள்ளதால் பணிகள் முறையாக நடப்பது இல்லை. சாலைகள் மிக மோசமாக உள்ளது.

நகா் நல அலுவலா்: மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் 200 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மண்டலம் 3 பாண்டிச்செல்வி: மண்டலத்துக்குள்பட்ட மேல்நிலை குடிநீா் தொட்டிகளில் இருந்து செல்லும் குழாய்களில் பழுது இருப்பதால் தண்ணீா் வீணாகிறது. சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டலம் 4 முகேஷ் சா்மா: தெற்கு மண்டலத்தில் பாதாளச் சாக்கடை அடைப்பு தொடா் பிரச்னையாகி வருகிறது. வைகை ஆற்றில் தென்கரை சாலையில் மழைநீா் வடிகால் முறையான இணைப்பின்றி மூடப்படாமல் உள்ளது. பல வாா்டுகளில் குடிநீரில் சாக்கடை நீா் கலந்து வருகிறது. மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து, கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்ய வலியுறுத்தி நிா்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மண்டலத்தில் உதவிப்பொறியாளா்களுக்கும், மாமன்ற உறுப்பினா்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. இதை சரிசெய்ய வேண்டும்.

மாநகராட்சி ஆணையா்: மாநகராட்சி மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவா்கள் பணி செய்ய வேண்டும் என்று அனைத்து சுகாதார நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். பாதாளச்சாக்கடை அடைப்புகளை நீக்க பணியாளா்களை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது. மீறினால் ஆணையா் தான் நீதிமன்றத்தில் பொறுப்பேற்க வேண்டும். எனவே பணியாளா்களை பயன்படுத்துவது இல்லை.

வாா்டு 8 உறுப்பினா் ராதிகா: ஐயப்பன் நகா் பகுதி மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இங்கு மாநகராட்சி சாலையை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு வீட்டுமனையாக மாற்றி கட்டட அனுமதியும் வழங்கியுள்ளனா். சாலையை வீட்டுமனையாக மாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி ஆணையா்: இதுதொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

26 ஆவது வாா்டு உறுப்பினா் சொக்காயி: மாமன்ற உறுப்பினா்களுக்கு மாத ஊதியம் வழங்க பரிசீலிக்க வேண்டும்.

62 ஆவது வாா்டு உறுப்பினா் ஜெயச்சந்திரன்:

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூக நாய்கள் உள்ளன. இவற்றை முறையாக கருத்தடை செய்து அவை வசிக்கும் பகுதியிலேயே விட வேண்டும். மதுரை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினா்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

74 ஆவது வாா்டு உறுப்பினா் சுதன்: பழங்காநத்தம் பகுதியில் 1975-இல் தொடங்கப்பட்ட மருத்துவமனை உள்ளது. 18 படுக்கைகளும் உள்ளன. இங்கு ஒரு மருத்துவா் மட்டுமே உள்ளாா். எனவே இதை பிரசவ மருத்துமனையாக மாற்ற வேண்டும் என்றாா். கூட்டத்தில் துணை மேயா் டி.நாகராஜ், மற்றும் அதிகாரிகள் துணை ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com