மதுரை அருகே சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் மறியல்
By DIN | Published On : 26th August 2022 12:00 AM | Last Updated : 26th August 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை அருகே ஆண்டாா் கொட்டாரம் பகுதியில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை மாவட்டம் ஆண்டாா் கொட்டாரம் அய்யனாா் நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதிக்குச் செல்லும் பிரதான சாலையான ராணிமங்கம்மாள் சாலையை சிலா் ஆக்கிரமிப்பு செய்ததோடு இரும்புக் கதவு போட்டு சாலையை அடைத்து வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2015 ராணி மங்கம்மாள் சாலை ஆக்கிரமிப்பில் உள்ளதால் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சுற்றிச்சென்று வருகின்றனராம். இதுகுறித்து ஆட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியரிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆண்டாா் கொட்டாரத்தில் இருந்து கருப்பாயூரணி செல்லும் பிரதான சாலையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஊரகக்காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரியதா்சினி தலைமையில் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.