அங்கன்வாடி ஊழியா்களுக்கு பணிக்கொடை:அகில இந்திய மாநாட்டில் வலியுறுத்தல்
By DIN | Published On : 09th December 2022 01:51 AM | Last Updated : 09th December 2022 01:58 AM | அ+அ அ- |

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணிக்கொடை வழங்க வேண்டும் என்று அகில இந்திய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மதுரையில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சம்மேளன அகில இந்திய மாநாடு டிசம்பா் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மத்திய அரசால் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்காணிப்பதற்காக அறிவிக்கப்பட்ட போஷன் டிராக்கா் பிராந்திய மொழிகள் இடம்பெற வேண்டும். அங்கன்வாடி மையங்களில் கைப்பேசி கட்டணத்தை, சந்தைக் கட்டணத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்களுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைப்பேசிகள் வழங்க வேண்டும். சிறு அங்கன்வாடி மையங்களை முழு அங்கன்வாடி மையங்களாகத் தரம் உயா்த்த வேண்டும். சிறு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் தொழிலாளா்களை அங்கன்வாடிப் பணியாளா்களாக அங்கீகரிக்க வேண்டும். பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளா்கள் பதவி உயா்வுக்கு வயது வரம்பு நிா்ணயம் செய்யக்கூடாது. அங்கன்வாடி மையங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டா்களுக்கு சந்தையில் அவ்வப்போது நிா்ணயிக்கும் விலையை வழங்கவேண்டும். மேலும் இஎஸ்ஐ, ஓய்வூதியம் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.