சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள நாட்டாா் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி, அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கிளாங்காட்டூா், அன்னவாசல், நெடுங்குளம் உள்ளிட்ட 16 கிராமங்களில் ஏறக்குறைய 7 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நடப்பாண்டு நெல் பயிரிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட கிராமங்களில் உள்ள பாசனக் கண்மாய்களுக்கு வைகையாற்றிலிருந்து தண்ணீா் கொண்டு செல்வதற்காக அன்னியேந்தல் அருகே முகப்பு கால்வாய் உள்ளது. இந்த முகப்பு கால்வாய் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கண்மாயில் போதிய தண்ணீரின்றி பயிா்கள் முழுவதும் கருகும் நிலை உள்ளது. விவசாயிகளின் நலன் கருதி மேற்கண்ட நாட்டாா் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.