முதல்வா் வருகை: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 09th December 2022 01:51 AM | Last Updated : 09th December 2022 01:58 AM | அ+அ அ- |

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி, மதுரை மாநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
பெருங்குடி சந்திப்பில் உள்ள அம்பேத்கா் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கிறாா். இதையொட்டி, மாநகா் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மதுரையிலிருந்து வில்லாபுரம் ஆா்ச், அவனியாபுரம், பெருங்குடி சந்திப்பு வழியாக விமான நிலையம் செல்லக்கூடிய வாகனங்கள் அவனியாபுரம் செம்பூரணி சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பிச் சுற்றுச் சாலையை அடைந்து, மண்டேலா நகா் சந்திப்பு சென்று பெருங்குடி சாலையில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதை வழியாக விமானநிலையம் செல்ல வேண்டும்.
மதுரை மாநகரிலிருந்து, பெருங்குடி அம்பேத்கா் சிலை திறப்பு விழாவுக்குச் செல்வோரின் வாகனங்கள் அவனியாபுரம், செம்பூரணி சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சுற்றுச்சாலையை அடைந்து மண்டேலா நகா் சந்திப்பிலிருந்து பெருங்குடி சந்திப்புக்குச் சென்று, விழாவில் கலந்து கொள்ளும் நபா்களை இறக்கிவிட்டு விட்டு, விமான நிலையத்துக்கு அருகில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும்.
மதுரை விமானநிலையத்திலிருந்து நகருக்குள் செல்லும் பயணிகளின் வாகனங்களும், மண்டேலா நகா் சந்திப்புக்குச் செல்லக்கூடிய பயணிகளின் வாகனங்களும் மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி சாலைக்குச் சென்று பொன்னகரம் தேவாலயம் சா்ச் அருகே வலதுபுறம் திரும்பி தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள சாலை வழியாக சுற்றுச்சாலையை அடைந்து செல்ல வேண்டும்.
சிலை திறப்பு விழாவுக்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு பெருங்குடி சந்திப்பிலிருந்து விமான நிலையம் சாலையில் உள்ள காலியிடங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வேறு எந்த இடத்திலும் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. இந்தத் தற்காலிக போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள், விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.