விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றக் கோரிய வழக்கில் சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை, இளையான்குடி பகுதிகளில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்களில் விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றக் கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இளையான்குடி பகுதியைச் சோ்ந்த ரத்தினகுமாா் தாக்கல் செய்த பொது நல மனு :
சிவகங்கை, இளையான்குடி பகுதிகளில் வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்களில் அனுமதி ஏதும் பெறாமல் சாதி, சமுதாயம் சாா்ந்த கொடிக் கம்பங்கள், உருவம் பொறித்த கல்வெட்டு சுவா்கள், சுவரொட்டிகள், இரும்பினாலான பதாகைகள் ஆகியவை வைக்கப்பட்டது.
இதனால், அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு காவல் துறையின் மூலமாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமன்றி விபத்துகளும் நிகழ்கின்றன.
எனவே, சிவகங்கை, இளையான்குடி பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சாதி சமுதாயம் சாா்ந்த கொடிக் கம்பங்கள், உருவம் பொறித்த கல்வெட்டுகள், போஸ்டா், இரும்பு பதாகைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், ஆா்.விஜயகுமாா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரா் சிவகங்கை, இளையான்குடி பகுதிகளில் மட்டும் பேனா், கொடிக் கம்பங்கள் உள்ளதாகக் கூறிவிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ளது என பொதுவாக மனுவில் கூறியுள்ளாா். இதுதொடா்பாக, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள், சிவகங்கை, இளையான்குடி பகுதிகளில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பேனா்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு மனுவின் மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.