டேக்வாண்டோ போட்டி: தேசியப் போட்டிக்கு மதுரை மாணவிகள் தோ்வு
By DIN | Published On : 11th December 2022 11:25 PM | Last Updated : 11th December 2022 11:25 PM | அ+அ அ- |

தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவிளைப் பாராட்டிய டேக்வாண்டோ சங்கத் தலைவா் நாராயணன், செயலா் பிரகாஷ்.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்ற மதுரையைச் சோ்ந்த 3 மாணவிகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே தென் மண்டல அளவில் இந்தப் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இந்தப் போட்டியில் மதுரையிலுள்ள வல்லப வித்யாலயா பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் வைஷ்ணவி, ராகவி ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா். மேலும், மதுரை குயின் மீரா சா்வதேச பள்ளியைச் சோ்ந்த மாணவி மானஸா தேவி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.
தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவிகளை மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்கத் தலைவா் நாராயணன், செயலா் பிரகாஷ் குமாா் ஆகியோா் பாராட்டினா்.