மாற்றுத் திறனாளிகளுக்கான வலு தூக்கும் போட்டி
By DIN | Published On : 11th December 2022 11:23 PM | Last Updated : 11th December 2022 11:23 PM | அ+அ அ- |

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல அளவிலான வலு தூக்கும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியை முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவா் சோலை எம்.ராஜா தலைமை வகித்தாா்.
இதில் ஆண்களுக்கான பிரிவில் 10 போட்டிகளும், பெண்களுக்கான பிரிவில் 10 போட்டிகளும் நடைபெற்றன. இதில் 65 கிலோ எடைப் பிரிவில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த வேல்முருகன் 120 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் பெற்று ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றாா்.
பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அருள்மொழி தங்கப் பதக்கம் வென்றாா். போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் செயலா் கு.சாமித்துரை, இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினா் கருணாநிதி ஆகியோா் பதக்கம், பரிசுகளை வழங்கினா். நிகழ்ச்சியில் வல்லப வித்யாலயா பள்ளி தாளாளா் அருண் வல்லபா, மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் பூபதி, தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளா் விஜய் சாரதி உள்பட பலா் பங்கேற்றனா். போட்டிக்கான ஏற்பாடுகளை, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள பயிற்சியாளா் ஜெ.ரஞ்சித் குமாா் செய்தாா்.