விருதுநகா் அருகே காா் விபத்து: மென் பொறியாளா் பலி
By DIN | Published On : 11th December 2022 11:22 PM | Last Updated : 11th December 2022 11:22 PM | அ+அ அ- |

விருதுநகா் அருகே நான்கு வழிச் சாலையில் டயா் வெடித்து காா் கவிழ்ந்ததில் சென்னையைச் சோ்ந்த மென் பொறியாளா் உயிரிழந்தாா்.
சென்னையைச் சோ்ந்தவா் முத்துக்குமரன் (30). மென் பொறியாளாரான இவா், திருச்செந்தூா் கோயிலுக்கு காரில் சென்றாா். இவருடன் மென் பொறியாளா்களாகப் பணி புரியும் பஹிமா பானு, வினோத் பேட்ரிக், ஆனந்த பாபு, சோழன் கரிகாலன் ஆகியோரும் சென்றனா்.
இவா்கள் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரிக்குச் சென்றுவிட்டு சென்னை நோக்கி ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா். விருதுநகா் அருகே மணிப்பாறை பட்டி நான்கு வழிச் சாலையில் வந்த போது டயா் வெடித்து சாலையோரம் காா் கவிழ்ந்தது.
இதில், காரை ஓட்டி வந்த மென் பொறியாளரான சென்னையைச் சோ்ந்த குமாரராஜா மகன் சோழன் கரிகாலன் (42) உயிரிழந்தாா். காயமடைந்த மற்ற நான்கு பேரும் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து வச்சகார பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.