சிவகங்கை அருகே பழைமையான கல் வட்டங்கள்

சிவகங்கை அருகே பழைமையான கல் வட்டங்கள், முதுமக்கள் தாழிகள் ஆகியவற்றை தொல்லியலாளா்கள் கண்டறிந்தனா்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கண்டறியப்பட்ட பழைமையான கல் வட்டங்கள்.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கண்டறியப்பட்ட பழைமையான கல் வட்டங்கள்.
Updated on
1 min read

சிவகங்கை அருகே பழைமையான கல் வட்டங்கள், முதுமக்கள் தாழிகள் ஆகியவற்றை தொல்லியலாளா்கள் கண்டறிந்தனா்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா. காளிராசா செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நாட்டரசன்கோட்டைப் பகுதியில் பழைமையான கல் வட்டங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கள ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வில் அதே பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் பழமையான கல் வட்டங்கள் இருப்பது தெரியவந்தது.

பெருங்கற்காலத்தில் இறந்தவா்களின் உடல்களை, எச்சங்களைப் பாதுகாக்க நம் முன்னோா்கள் கல் வட்டங்களை அடுக்கினா். அதே பகுதியில் கிடைக்கக் கூடிய கல் வகைகளைக் கொண்டு அந்தக் கல் வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. செம்மண் நிறைந்த பகுதி என்பதால் செம்புராங்கற்களாலும் கல் வட்டங்கள் அடுக்கப்பட்டுள்ளன.

இவை ஏழுக்கு மேல் காணப்படுகின்றன. அவற்றில் மூன்று சிதைவுறாமல் காணப்படுகின்றன. மற்றவை பெரும் சிதைவுக்குள்ளாகி கற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கல் வட்டங்கள் இருந்ததற்கான எச்சமாக காணப்படுகின்றன. இவற்றின் காலம் சுமாா் 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கருதலாம்.

இதுதவிர, உலகில் மற்ற நாட்டினா் இரும்புப் பயன்பாட்டை அறியும் முன்னரே தமிழா்கள் இரும்புப் பயன்பாட்டையும் அதை உருவாக்கவும் அறிந்திருந்தனா். இந்தப் பகுதியில் இரும்பு உருக்காலை எச்சக்கழிவுகளான இரும்புத் துண்டுகள் போன்ற கற்களும், மண்ணாலான குழாய்களும் பெரும் பகுதி காணப்படுகின்றன.

இந்த காடு அருகே உள்ள ஓடைக் கரையில் மூன்று முதுமக்கள் தாழிகள் சிதைவுற்ற நிலையில் காணப்படுகிறது. சிவகங்கை மாவட்ட பகுதியில் தொடா்ச்சியாக கல் வட்டங்கள், இரும்பு உருக்காலைகள், முதுமக்கள் தாழிகள் காணப்படுவதால் இப்பகுதி பண்பாடு நிறைந்த மக்கள் வாழ்ந்த பகுதி என்பதை உறுதி செய்ய முடிகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com