மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்க முன்னாள் அமைச்சா் வலியுறுத்தல்
By DIN | Published On : 11th December 2022 05:40 AM | Last Updated : 11th December 2022 05:40 AM | அ+அ அ- |

வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளையொட்டியும், அதிமுகவின் பொன் விழா ஆண்டையொட்டியும் வருகிற 2023 பிப்ரவரி 23-ஆம் தேதி மதுரை மாவட்டம், டி. குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சாா்பில் 51 பேருக்குத் திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இதில், எனது மகளுக்கும் திருமணம் நடைபெறுகிறது.
இந்த விழாவில், முன்னாள் முதல்வரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கிறாா். திருமண விழாவுக்கான முகூா்த்தக்கால் நடும்
விழா ஞாயிற்றுக்கிழமை காலை டி. குன்னத்தூரில் நடைபெறுகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழை வலுப்பெற்றுள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்படாதவாறு, அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, மதுரையில் நடைபெற்ற மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான வலுத் தூக்கும் போட்டியை அவா் தொடங்கி வைத்தாா்.