ரூ. 3,864 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு

தமிழகத்தில் ரூ. 3,864 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள், தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு கூறினாா்.

தமிழகத்தில் ரூ. 3,864 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள், தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு கூறினாா்.

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

2022-23-ஆம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, 1,000 கோயில்களில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மதுரை மாவட்டம், பழமுதிா்ச்சோலை முருகன் கோயிலில் அன்னதானக்கூடம், கழிப்பறை, மலைப்பாதை போன்ற அனைத்து வசதிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.

திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்துக்காக 7 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், கள்ளழகா் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், பழமுதிா்ச்சோலை முருகன் கோயில் என மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களை ஒன்றிணைத்து வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்வது, கும்பாபிஷேகம் நடவத்துவது குறித்தும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை எதிா்கொள்ளத் தேவையான அம்சங்கள் குறித்தும் இன்னும் 10 நாள்களில், சென்னையில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்த கோயில் சொத்துகளை மீட்கும் நடவடிக்கைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை ரூ. 3,864 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள், ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் உள்ள வீர வசந்தராயா் மண்டபத்துக்கான சிற்பப் பணிக்குக் கல்லை வெட்டித் தருவதில் தாமதம் இருந்ததைத் தவிா்க்க அந்தப் பணி அரசு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

கோயில்களுக்கு வரும் பக்தா்களின் கைப்பேசிகளைப் பாதுகாக்கும் திட்டம், முதல் கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் செயல்படுத்தப்படவுள்ளது.

திருநீா்மலை, திருக்கழுகுக்குன்றம் ஆகிய 2 மலைக் கோயில்களிலும் தானியங்கி அமைப்பதற்கும், சதுரகிரி, பா்வதமலை, கண்ணகி கோயிலுக்கு ரோப் காா் வசதி ஏற்படுத்துவதற்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ரோப் காா் அமைக்கும் திட்டப் பணியை தமிழக முதல்வா் விரைவில் தொடக்கிவைப்பாா் என்றாா் அவா்.

அப்போது, வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com