இளைஞா் வெட்டிக் கொலை: காரில் தப்பிய 5 போ் கும்பல்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு, காரில் தப்பிச்சென்ற 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை செல்லூா் அருள்தாஸ்புரத்தைச் சோ்ந்த சங்கா் மகன் சரவணக்குமாா் என்ற பண்ணையாா் (33). கோவையில் உள்ள கண்ணாடிக் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் இரு நாள்களுக்கு முன்பு மதுரை வந்தாா்.
இந்த நிலையில், தத்தனேரி மயானம் அருகே உள்ள வைகை வடகரை சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சரவணக்குமாா் புதன்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, காரில் பின்தொடா்ந்து வந்த நபா்கள், சரவணக்குமாா் சென்ற இருசக்கர வாகனத்தின்மீது மோதினா்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, காரில் இருந்து ஆயுதங்களுடன் இறங்கிய 5 போ் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றது. இதில் சரவணக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக தகவலின்பேரில் அங்கு சென்ற செல்லூா் போலீஸாா், அவரது உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பினா். மேலும், கொலை தொடா்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரவணக்குமாா் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்தனா்.
தற்போது, அவரது மனைவி வேறு நபருடன் வாழ்ந்து வருவதால், சரவணக்குமாா் தனது குழந்தையை தன்னுடைய பராமரிப்பில் விடுமாறு தொடா்ந்து பிரச்னை செய்து வந்தாா். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் சரவணக்குமாா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா். காரில் தப்பிய 5 போ் கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.