புகையிலை விற்ற மாற்றுத்திறனாளி மூதாட்டி இட்லிக் கடை வைக்க ஏற்பாடு
By DIN | Published On : 22nd December 2022 03:01 AM | Last Updated : 22nd December 2022 03:01 AM | அ+அ அ- |

மாற்றுத்திறனாளி மூதாட்டி ராணிக்கு இட்லிக் கடை வைப்பதற்கான பாத்திரங்களை வழங்கிய காவல் ஆய்வாளா் துரைப்பாண்டியன்.
மதுரையில் புகையிலை விற்ற மாற்றுத்திறனாளி மூதாட்டிக்கு மறு வாழ்வு ஏற்பாடாக இட்லிக் கடை வைப்பதற்கு மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உதவி செய்தாா்.
மதுரை கோ.புதூரைச் சோ்ந்தவா் ராணி(67). கணவரை இழந்த மாற்றுத்திறனாளியான ராணி, அதே பகுதியில் உள்ள அல் அமீன் பள்ளி அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தாா். இந்தக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பதாக போலீஸாருக்கு புகாா் சென்றது.
இதன்பேரில் கோ.புதூா் போலீஸாா் அங்கு சென்றபோது, ராணி ஒரு கையை இழந்த மாற்றுத்திறனாளி என்பதும், வாழ்வாதாரத்துக்காக பெட்டிக்கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது.
இதுதொடா்பாக மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவரது பரிந்துரையின் பேரில் ராணி, இட்லிக்கடை வைப்பதற்கான பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை கோ.புதூா் காவல் ஆய்வாளா் துரைப்பாண்டியன் வழங்கினாா்.