மனிதக் கழிவுகளை அள்ளும் பணியில் தொழிலாளா்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை: உயா்நீதிமன்றம்
By DIN | Published On : 22nd December 2022 02:59 AM | Last Updated : 22nd December 2022 02:59 AM | அ+அ அ- |

மனிதக் கழிவுக்களை அள்ளும் பணியில் தொழிலாளா்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த நாகராஜன் தாக்கல் செய்த மனு:
மனிதனே மனிதக் கழிவுகளை அள்ளத் தடை, மறுவாழ்வுக்கான சட்டம் 2013- இல் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டம் அமலாவதை கண்காணிக்கும் வகையில், மாநிலம் தோறும் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். இவா்கள் ஆய்வுகள் மேற்கொண்டு இப்பணியில் ஈடுபட்டுள்ளவா்களைக் கண்டறிய வேண்டும். மேலும், அவா்களது மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சட்டத்தை மீறி இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்துவோா் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதேபோல, விஷவாயு தாக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதில்லை. மத்திய, மாநில அளவிலான கண்காணிப்பு குழுக்களையும், மாவட்ட அளவிலான விழிப்புணா்வு குழுக்களையும் அமைக்க வேண்டும். கையால் மனிதக் கழிவுகள் அள்ளுவதை தடுக்க வேண்டும். அவா்களுக்கு தேவையான மறுவாழ்வை ஏற்படுத்த வேண்டும் என அதில் அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் அமா்வு பிறப்பித்த உத்தரவு :
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை முற்றிலுமாக அகற்ற வேண்டும். கையால் மனிதக் கழிவுகளை அள்ளும் வகையில் பணியில் ஈடுபடுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை சாா்ந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். கழிவுநீா்க் கால்வாய்கள் இயந்திரங்கள் மூலம் மட்டுமே அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கையால் மனிதக்கழிவுகள் அள்ளுவதை தடுக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக அவா்களின் சமூக தரத்தை உயா்த்தும் வகையில் அவா்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இதுவரை இழப்பீடு வழங்காதவா்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.