விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துமனை மூலம் தானமாகப் பெறப்பட்டு, திருச்சி, பெரம்பலூா் மருத்துவமனைகளுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியைச் சோ்ந்தவா் மா. வீரய்யா(40). இவா் கடந்த 14-ஆம் தேதி இரவு திருப்பாச்சேத்தியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு, வீரய்யா மூளைச் சாவு அடைந்தது புதன்கிழமை காலை கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது மனைவி லாவண்யா, உறவினா்களின் அனுமதியுடன் வீரய்யாவின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. அவரது கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. திருச்சி தனியாா் மருத்துவமனைக்கு கல்லீரலும், பெரம்பலூா் தனியாா் மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகமும் அனுப்பப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற உறுப்பு மாற்று சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது.
உறுப்பு தானம் அளிக்க முன்வந்த வீரய்யாவின் மனைவி, அவரது குடும்பத்தினருக்கு மருத்துவமனை சாா்பில் நன்றி தெரிவிப்பதாக, மதுரை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு உதவி நிலைய மருத்துவ அலுவலா் முருகுபொற்செல்வி தெரிவித்தாா்.