மதுரையில் கட்டுமானப் பணிகள் முழுமையடைவதற்குள் வணிக வளாகத்துக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது?

பாதுகாப்பு வசதிகள் இல்லாத சூழலிலும் அந்த வணிக வளாகத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர எப்படி அனுமதி வழங்கப்பட்டது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

மதுரை மாட்டுத்தாவணி அருகே 10 மாடி தனியாா் வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையிலும், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத சூழலிலும் அந்த வணிக வளாகத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டு வர எப்படி அனுமதி வழங்கப்பட்டது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

மேலும், இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை அலுவலா், காவல் துறை ஆணையா், போக்குவரத்துக் காவல்துறை ஆணையா், பொதுப் பணித் துறையின் கண்காணிப்புப் பொறியாளா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த சமூக ஆா்வலரும், மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநருமான ஹென்றி திபேன் தாக்கல் செய்த மனு:

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ஏரிப் பகுதியில் 5 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்ட தனியாா் வணிக வளாகம் இந்த மாதம் 5 -ஆம் தேதி திறக்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் கட்டடம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 10 மாடிகளுடன் கூடிய இந்த வணிக வளாகத்தில் சுமாா் ஆயிரம் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணிகளும் முழுமை அடையவில்லை. இதனால், ஏராளமான வாகனங்கள் சாலைகளின் இருபுறங்களிலும் நிறுத்தப்படுவதால், அந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், இந்த வணிக வளாகம் அருகே தனியாா் மருத்துவமனைக்கு அவசரச் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

இதே போல, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, திருச்சி, திருநெல்வேலி, நாகா்கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்அருகில் தனியாா் ஆம்னி பேருந்து நிலையமும் உள்ளது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வணிக வளாகத்தின் முன்பாக ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, அந்தச் சாலையில் பேருந்துகளை இயக்க முடியவில்லை.

இதேபோல, சாத்தையாறு அணையின் உபரி நீா் வரக்கூடிய வரத்துக் கால்வாய், இந்த வணிக வளாகத்தினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், மழைக் காலங்களில் மழைநீா் வெளியேர முடியாமல் ஏரியின் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துவிட வாய்ப்புள்ளது. கட்டுமானப் பணிகள் முழுமையடையாத நிலையில், அவசர கால வழிகளின்றி கட்டடம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பெரிய வணிக வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, இந்த வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகள், பாதுகாப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையாமல் உள்ளன. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த வணிக வளாகம் செயல்பட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே. முரளிசங்கா், 10 மாடி தனியாா் வணிக வளாக கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையிலும், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையிலும், அதைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினாா். மேலும், இந்த வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், காவல் துறை ஆணையா், போக்குவரத்துக் காவல்துறை ஆணையா், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பா் 23 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com