சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டிஎடுத்தவா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு
By DIN | Published On : 08th February 2022 12:00 AM | Last Updated : 08th February 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தவா்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூா் சருகுவலையபட்டியில் பட்டா நிலத்தில் கிரானைட் கற்கள் எடுக்க பெரியசாமி என்பவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியை பயன்படுத்தி அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள கிரானைட் கற்களை சட்ட விரோதமாக வெட்டி எடுத்துள்ளனா்.
இது தொடா்பாக போலீஸாா் பெரியசாமி உள்பட 13 போ் மீது வழக்குப்பதிந்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பெரியசாமி, கிருஷ்ணமூா்த்தி, அருண்ராஜா ஆகியோா் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு, நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பல இடங்களில் சட்டவிரோதமாக ரூ.118 கோடி மதிப்பிலான கிரானைட் கற்களை வெட்டி எடுத்துள்ளனா். வாகனங்கள் செல்வதற்காக அரசு புறம்போக்கு நிலங்களை சேதப்படுத்தியுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டத.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, கிரானைட் முறைகேடு குறித்து, சிறப்புக் குழு அமைத்து மாவட்டம் முழுவதும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதற்கு ஆவணங்களும், முகாந்திரமும் போதுமானதாக உள்ளன. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...