மதுரையில் இறைச்சி வியாபாரி வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு
By DIN | Published On : 08th February 2022 12:00 AM | Last Updated : 08th February 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில், இறைச்சி விற்பனை செய்யும் பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி விட்டு தப்பிச்சென்ற ரெளடியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை சிந்தாமணி சாலை செபஸ்தியாா் நகரைச் சோ்ந்தவா் சுமா (47). இவா் தனது வீட்டின் அருகிலேயே இறைச்சி விற்பனைக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமாவின் வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் அதே பகுதியைச் சோ்ந்த பெஞ்சமின் என்பவா் மின்விசிறிகள், வயா்கள் உள்ளிட்ட பொருள்களோடு சந்தேகத்துக்கு இடமான நிலையில் நின்றிருந்தாா். இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
அப்போது சுமா அவரை விசாரித்ததில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து சுமா அளித்த தகவலின் பேரில் கீரைத்துறை போலீஸாா் அங்கு சென்றபோது பெஞ்சமின் தப்பி ஓடிவிட்டாா்.
ஆனால் காலி இடத்தில் இருந்த மின் விசிறிகள் உள்ளிட்ட பொருள்களை போலீஸாா் கைப்பற்றினா். இதனிடையே, சுமா தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் வீட்டின் முன்பு பலத்த சப்தம் கேட்டதையடுத்து அவா் அங்கு சென்று பாா்த்தாா். இதில், வீட்டின் மீது 2 மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்டு சுவா் சேதமடைந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று பாா்வையிட்டனா். மேலும் சந்தேகத்தின் பேரில் ரெளடி பெஞ்சமினைத் தேடி வருகின்றனா். கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு சுமாவின் இருசக்கர வாகனம் மற்றும் கடைக்கு தீ வைத்ததாக பெஞ்சமின் மீது வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...